Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out

Pages

Monday, July 4, 2011

கறுப்பு தினம் - சிறுகதை


ராகவனுக்கு இருப்பே கொள்ளவில்லை நர்மதா - அவன் மனைவி - வீடு வந்து சேரவேண்டுமே என்றிருந்தது. மனசு முழுக்கக் கவலை வியாபித்திருந்தது.
ராகவனுக்கு இன்று அலுவலகம் விடுமுறை. அவள் வேலை செய்வதோ தனியார் நிறுவனத்தில் எனவே அவர்கள் வசதிப்படி தான் விடுமுறைகளும் இருக்கும். தினமும் ராகவன் தன் வண்டியில் அவளை ஆபிஸில் இறக்கிவிட்டுப் போவான். ஆனால் அவனுக்கு நேற்று மாலையிலிருந்தே ஜுரம் ஆரம்பித்திருந்தது.

காலையில் புறப்படும்போது கூட அவளிடம் கேட்டான், ’நானே கொண்டுவிடட்டுமா?’ என்று அவள் தான் உங்களுக்கு எதுக்கு வீண்அலைச்சல்...இன்னைக்கு ஒருநாள் தானே நானே போய்க்கிறேன்.. நீங்க ரெஸ்ட் எடுத்துக்குங்க.. அதோட மறக்காம டாக்டர்கிட்ட போய்ட்டு வாங்க..ஏதாவது வேணும்னா பக்கத்துவீட்டம்மாகிட்ட கேளுங்க.. எப்படியும் குழந்தைங்க வர்றதுக்கு முன்னாடி வந்திடுவேன்..என்று சொல்லிவிட்டுச் சென்றவள் குழந்தைகள் வந்த பின்பும் காணவில்லை. ஆபிஸிற்கு போன் செய்தால் ரிங் போய்க்கொண்டேயிருந்தது. நெட்வொர்க் எல்லாம் ஜாம் என்று சொன்னார்கள். அடுத்த மாதம் முதலில் அவளுக்கு ஒரு மொபைல் ஃபோன்வாங்க நினைத்தான்.


சாதாரணநாள் என்றால் கூட இவ்வளவு கவலைப்படமாட்டான் இன்றைக்கு என்று யாரோ ஒரு அரசியல் தலைவர் உண்ணாவிரதம் இருந்து கைது செய்யப்பட்டு, தொண்டர் தீக்குளித்து இன்னும் பிரச்னை கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்துவிட்டது. குழந்தைகளின் ஸ்கூல் அருகாமை என்பதால் வந்துவிட்டார்கள். அவள் அலுவலகம் தூரத்திலிருந்தது என்பதோடு அங்கு போய்வரும் பஸ்களின் எண்ணிக்கையும் குறைவு. இந்த மாதிரி சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த பல கும்பல்கள் தங்கள் வெறியை, தனிமனித காழ்ப்புணர்ச்சியைக் காட்டிக்கொண்டிருந்தன.

பெரியவள் அனுவைக் கதவை உள்பக்கம் பூட்டிக் கொள்ளச் சொல்லி விட்டு விசாரித்து வருவதற்காக அடுத்த வீட்டுக்குப் போனான். அப்போதுதான் கல்லூரியில் படிக்கும் பக்கத்துவீட்டுப் பையன் தான் வரும்போது பார்த்த சில கும்பல்களின் அராஜகச் செயல்களையும், தான் பெரும்பாடு பட்டு வந்ததையும் அட்வென்சர்படம் போல சொல்லிக்கொண்டிருந்தான். கறுத்த எலும்புக்கூடுடன் வாகனங்கள் - கடைகளின் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டு பொருள்கள் சூறையாடப்பட்டனவாம்.

அவன் குழந்தைகளைத் தனியாகவிட்டு வந்திருப்பது எண்ணி அச்சப்பட்டான். தங்கள் வீட்டுப் பால்காரன் வராததால் - இதுவரை அறிந்திராத சங்கடத்துடன் பால் வாங்கிக்கொண்டு புறப்பட்டான். அந்தம்மாவே மிகவும் தயங்கியது போல் தோன்றியது. குழந்தைக்குப் பால் வேண்டிய இந்த நேரத்தில் கௌரவம் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது என்று அந்நினைவை ஒதுக்கினான். குளிர்காற்று நெருப்பாய்க் கொதிக்கும் காய்ச்சலுககு விசிறிவிட்டது. மனைவியைப் பற்றிய கவலை இன்னும் ரத்தத்தைச் சூடுபண்ணி தலைவலியைத் தீவிரமாககிக் கொண்டிருந்தது.
நேரம் எட்டை நெருங்கிக்கொண்டிருந்தது. ராகவனின் கவலையும், காய்ச்சலும் எகிறியிருந்தன. கண்கள் தணலாய் எரிந்தன. உடம்புச் சோர்வு படுத்து போர்த்திக்கொள்ளச் சொல்லி கெஞ்சியது. ஸ்வெட்டர் போட்டுக் கொண்டான்.
இதுவரை பார்த்த அராஜகக் காட்சிகளெல்லாம் கண்முன் தாறுமாறாக ஊர்வலம் போயின.

ஒருவேளை.. ஒருவேளை.. அப்படி ஏதாவது.. தனியாக அவள் வியர்த்து விறுவிறுத்து வந்துகொண்டிருக்க.. ஏதாவது ஒரு கும்பல் வழிமறித்து.. சே... சே.. அப்படியெல்லாம் இருக்காது. அப்படி ஏதாவது நடந்துவிட்டால்.. ஐயோ.. கடவுளே ஏன் இப்படி வதைக்கிறாய்? மனசு உலகிலுள்ள சக்தி வாய்ந்ததாக சொல்லப்படும் எல்லாக் கடவுள்களையும் வேண்டிக்கொண்டது.. ஜுரமோ இன்னும் சில மணிநேரத்தில் சரீரத்தையே உருக்கிவிடும் போல் ஏறிக்கொண்டேயிருந்தது. கண்களில் நீர் சுரந்தது. ஜுரத்தின் உச்சமோ? அல்லது மனதுக்கத்தின் பெருக்கெடுப்போ?

ரவு மணி பத்து. தொலைக்காட்சியில் அதே செய்தி.. வாசிப்பவர் மட்டும் வேறு. அனு புத்தகங்களின் மேலேயே படுத்துத் தூங்கிப்போயிருக்க, வேறொரு சமயமாக இருந்தால் தூக்கிப் படுக்கையில் படுக்கவைத்திருப்பான். கலக்கமான மனசு அதைப் பற்றி எண்ணிப்பார்க்கக்கூட அவகாசம் தராது மனைவியைப் பற்றிய கவலையிலேயே உழன்றுகொண்டிருந்தது. கண் பார்க்கும் எதுவும் மூளைக்கு எட்டவில்லை.  குழந்தை ப்ரதீப் கொசு கடித்து, சிணுங்கி, மூக்கைக் கசக்கிவிட்டுக்கொண்டு புரண்டு படுத்தான்.

இனியும் தாங்கமுடியாது என்று பக்கத்துவீட்டு அம்மாளை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, மஃப்ளர் சுற்றிக்கொண்டு வண்டியைக் கிளப்பினான். சற்று தொலைவிலிருக்கும் தன் மனைவியுடன் வேலை பார்ப்பவரின் வீட்டிற்குச் செல்ல தீர்மானித்தான். மனசின் வேகத்திற்கு, பரபரப்பிற்க்கு ஏற்றபடி வாகனத்தைச் செலுத்த உடம்பு ஒத்துழைக்கவில்லை. மிகவும் கவனமாக செலுத்த வேண்டியிருந்தது. கண்கள் வேறு கலங்கி பார்வையை மங்கலாககியது.

அப்பப்பா.. என்ன கோரமான காட்சிகள்..

இவனுக்கு முதன்முதலாய் தன்னைப்பற்றியும் தன் பாதுகாப்பு பற்றியும் இனம்புரியாத அச்சம் எழுந்தது. குறுக்குவழியில் செல்லலாம் என்று வண்டியைத் திருப்பினான். ஒரு குறுக்குசந்திலிருந்து திடுமென்று வந்த அந்தக்கூட்டத்தைக கண்டு சற்று தூரத்திலேயே வண்டியை நிறுத்தியவனை நோககி - இரை கண்ட கழுகு போல் - ஆக்ரோஷத்துடன் ஓடிவந்தது அந்தக்கூட்டம் - பல ஆயுதங்களுடன்.

ரவு மணி பத்து.

’’டிங்டாங்.. டிங்டாங்..’’

காலிங்பெல்லின் அழைப்பு கேட்டு பக்கத்துவீட்டு அம்மாள் கதவைத் திறக்க.. சத்தம் கேட்டு விழித்துக்கொண்ட பையன், ’’ம்மா..’’ என்று ஓடிப்போய்க் கட்டிக்கொண்டான்.

’’எங்கே உன் வீட்டுக்காரர்?’’ என்றாள் பக்கத்துவீட்டு அம்மாள்.

’’அவர் எங்கே போனார்?’’ என்ற அவளின் எதிர்க் கேள்விக்கு பக்கத்துவீட்டு அம்மாள் விவரம் சொன்னாள்.

’’இவரு ஏன் என்னைத் தேடிப் போகணும்.. ஜுரம் வேற.. வீட்டுககு வராமல் எங்கே போயிடறேன்.. சே.. எனக்கு என்ன ஆகப்போகுது. ஆபீஸ்ல வண்டி அனுப்பி எல்லாரையும் வீட்டுல கொண்டுவிடச் சொன்னாங்க..’’ சலிப்புடன் நாற்காலியில் உட்கார்ந்தாள். முகத்தில் கலக்கரேகைகள் தோன்ற.. மனசில் கவலை அலையடித்தது.
நர்மதா காத்திருக்க ஆரம்பித்தாள். மறுபடி ஒரு காத்திருப்பு...


My second short story published in 1988.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன...