Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out

Pages

Friday, March 2, 2012

நிறைவு - சிறுகதை


பேருந்து நிலையமும், சுற்றியுள்ள இடங்களும் வியாபார, போக்குவரத்துச் சத்தங்களால் கலகலவென இருந்தாலும் வேலப்பன் அப்படியிருக்கவில்லை, காரணம் அவன் தொழில் அப்படியிருந்தது.

அன்றைக்கு என்று ஒரு கிராக்கிகூட வரவில்லை. இத்தனை பேர்களில் ஒருத்தனுக்குக் கூடவா செருப்பு அறுந்து போகவில்லை? அப்படியும் வரும் ஒன்றிரண்டு பேரும் பேருந்துநிலையத்துக்கு அருகிலுள்ள கண்ணுச்சாமியின் கடைக்குச் சென்றுவிடுகின்றனர். அது தன்னுடையதைவிடக் கொஞ்சம் ஷோக்காயிருக்கின்றதால் தான் எல்லாரும் அங்கு போகின்றனர்என்பது வேலப்பனின் எண்ணம்! அதோடு இவனுடையது சற்றுத்தள்ளி ஒதுக்குப்புறமாக இருக்கின்றது. ஆதிவாசிகள் நலத்திட்டத்தில் அரசாங்கம் பொட்டிக்கடைமாதிரி ஒன்றை அவனுக்கு அமைத்துத் தந்திருந்தது. அந்தச் சலுகை இவனுக்கு இல்லையென்று கூறி அவர்கள் சொன்ன காரணமும் இன்று வரை இவனுக்கு விளங்கவில்லை.


இடுங்கிப்போன கண்களுடன் தொத்தலாய்... அவனுக்கு ஐம்பது வயது இருக்கும்.
அகலமான சாக்கடையின் மேல் போடப்பட்டுள்ள சிமெண்ட் பலகையின் மேல் அந்தப் பழஞ்சுவரையட்டின மாதிரித் தான், கிழிந்த கோணிப்பை, பிளாஸ்டிக் பேப்பர் கூரையோடு இவன் வீடு, படுக்கை, கடை சகலமும். வயிற்றில் பசி தகதகத்தது. செட்டியார் ஜவுளிக்கடையில் போய் தண்ணீராவது குடிக்கலாமா? என்று அபிப்ராயப்பட்டான். அந்த நேரத்தில் ஏதாவது கிராக்கி வரலாம் என்ற சபலத்தில் அதை ஒத்திப் போட்டான். கண்ணிமைகளை சுருக்கிக் கொண்டு பார்வையை அலையவிட்டான், காத்திருந்தான்.

ஒரு கிராக்கி வந்துவிட்டால் போய் டீ குடிக்கலாம் என்றும் நினைத்தான்.
அந்தக் கர்ப்பிணிப் பெண் - நிறைமாதம் போலிருந்தது - மிகவும் சிரமமாய் நடந்து வந்து கொண்டிருந்தாள். சாயம் போன சேலையின் தலைப்பால் விசிறிக் கொண்டு புழுக்கத்தைக் குறைக்க முயன்றாள். போட்டிருந்த செருப்பில் வார் மட்டுமே முழுசாயிருந்தது. வெப்பத்தைத் தணித்துக் கொள்ள நினைத்தவளாய், அந்தப் பலசரக்குக் கடையின் முன் படிக்கட்டில் உட்கார்ந்தாள்.

கைகளைப் பின்னால் ஊன்றிக் கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். அந்தப் பக்கமிருந்த சர்பத் வண்டிக்காரன் கீழே இறைத்திருந்த தண்ணீரால் காற்று ஜில்லென்று வந்தது. தாகமாயிருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு அந்தக் குளிர்ச்சியை ரசித்து அனுபவிக்க முற்பட்டாள்.

பக்கத்து உணவு விடுதியில் கூட்டம் அதிகமாயிருந்தது. சாப்பாடு தயார்என்றது அறிவிப்புப் பலகை. கல்லாக்காரர் பில் குத்தி, மிச்சம் கொடுப்பதில் மும்முரமாயிருந்தார்.

‘‘யாரும்மா அது... இங்க வந்து ஒக்காந்திட்டிருக்கியே? யாவாரம் ஆகவேண்டாமா? அந்தப் பக்கம் போய் உட்காரு... ’’ என்றார் கடைக்காரர், கறாராக.


அந்தப் பெண் மிரட்சிப்பார்வையுடன் ஏதோ முணுமுணுத்துக் கொண்டு உணவு விடுதியின் பக்கமாக வந்து அமர்ந்தாள்.


‘‘இந்தாம்மா... யாருது? எழுந்திரு... எழுந்திரு... உக்கார்றதுக்கு வேற இடம் கிடைக்கலியா? போ... போ...’’ என்றார் யதேச்சையாய் திரும்பிய கல்லாக்காரர். மறுபடியும் எழுந்து நடக்க ஆரம்பித்தாள். சற்று முன்பு பார்வையை அலையவிட்ட வேலப்பன் இதைக் கவனித்தான். அவள் பிளாட்பாரத்தின் சிமெண்ட் தடுப்பைப் பிடித்துக் கொண்டு திட்டுதிட்டாய் வியர்வை வழியும் முகத்துடன் வந்துகொண்டிருந்தாள்.

‘‘இந்தாம்மா புள்ளைதாச்சிப் பொண்ணு... இப்படி வந்து ஒக்காந்துட்டு அப்பால போறது...’’ என்றான் வேலப்பன். அவள் திரும்பிப் பார்த்து இவனின் கடையை ஒட்டின மாதிரியிருந்த - மூடப்பட்டிருந்த கடையின் - படியில் அமர்ந்தாள்.


‘‘பொளப்புதான்மா பெரிசாப்போச்சு இந்தக் காலத்துல. புள்ளைதாச்சிப் பொண்ணை ஒக்காரக் கூட விடமாட்டேங்கறாங்களே...’’


‘‘¨ம் எல்லாம் தலையெழுத்துங்க... நம்ப பொளப்பு ஒழுங்கா நடக்கலைன்னாலும் மத்தவன் பொளப்பை நாம ஏன் கெடுக்கணும்..?’’ செருப்பைக் கழற்றிவிட்டுக் கால்களிரண்டையும் தேய்த்துவிட்டுக் கொண்டாள்.


‘‘இப்படிக் கொடும்மா செருப்பு ரெண்டையும் நல்லா தைச்சுத் தர்றேன்...’’


‘‘ஏன்யா நீ ஏதோ இரக்கப்பட்டுக் கூப்புடறயோன்னு நினைச்சேன்... நீயும் உன் பொளப்புக்காகதானா கூப்புட்டே?’’ - அலுப்புடன் சிரித்தாள்.


‘‘ஐயய்யோ அப்படியெல்லாம் சாமி சத்தியமா இல்லைம்மா.. நீ கொடுக்கறதைக் கொடு இல்ல ஒண்ணுமே வேணாந்தாயி.’’


‘‘என்கிட்ட பஸ் சார்ஜ் போக இவ்வளவுதான்யா மீதியிருக்கு...’’ - சில்லறைகளைக் காட்டினாள்.


அவன் தைத்துக் கொடுத்தான்...! கொஞ்சம் இரு தாயிஎன்று ஜவுளிக்கடையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டுத் தானும் குடித்தான்.


‘‘எங்கம்மா தனியா இந்த வெயில்லே போயிட்டு வர்றே? உம் புருசன் கூட வரல்லையா?’’


‘‘கவருமெண்டு ஆசுபத்திக்குய்யா... நான் கூலி வேலைக்குப் போகமுடியாததே இன்னிக்குப் பொழுதுக்குக் கஸ்டம்... இதுல புருசனும் வேலைக்குப் போகாம என்கூட வந்தா கஞ்சிகூடக் காய்ச்சமுடியாது...’’


‘‘ஏம்மா கொஞ்சம் சீக்கிரமே போகக்கூடாது..?’’


‘‘என்னய்யா பண்றது... இந்தா... நா வாரேன்...’’ - சிரமமாய் கையூன்றி எழுந்து நடந்தாள்.
வயிறு தண்ணீரில் நிறைந்திருக்க... மனசு முழுக்க மகிழ்ச்சி நிறைந்திருக்க... தன்னைவிட வசதியானவர்கள் செய்யாத ஒரு தர்மத்தைத் தன்னால் செய்ய முடிந்த பெருமையுடன்... வாயில் புன்னகையுடன், அவளை ஆதரவாகப் பார்த்தான். டீ குடிக்குமளவு காசு இருந்தது என்றாலும் அடுத்த கிராக்கி வந்தபின் டீ குடிக்கப் போகலாம் என்று நம்பிக்கையுடன், தெம்பாகக் காத்திருந்தான் வேலப்பன்.
My first short story published in "Thai Weekly" dt. 15-05-1988.  Image Courtesy:  Thai Weekly.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன...