Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out

Pages

Friday, March 9, 2012

வாசற்கதவு


ல வருடங்களுக்கு முன் நாம் பிறந்த, வாழ்ந்த, விற்ற வீட்டை மறந்திருந்தாலும் யாருக்கும் வாசற்கதவு மறந்திருக்காது. நம் பழையவீடு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வாசற்கதவு தான். வீட்டின் உள் அமைப்பு கூட மறந்துபோயிருக்கக் கூடும்.

பாதி திறந்த கதவு, பாதி மூடிய கதவு இரண்டுமே ஒன்றுதான். ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும்என்றும், ‘தட்டுங்கள் திறக்கப்படும் என்றும் சொல்வது கதவைப் பற்றி அல்ல
- வாழ்க்கையைப் பற்றி. ஒருவிதத்தில் ஒவ்வொரு கதவிற்குப் பின்னும் ஒரு புதிய வாழ்க்கை காத்திருக்கின்றது. கதவு என்பதே ஒருவிதத்தில் ஒரு ரகசியத்தை மற்றவர்களிடமிருந்து மறைக்கத்தான். அதனால் தானோ என்னவோ நான் பார்த்த பெரும் பணக்காரர்களின் வீட்டுக் கதவுகள் எல்லாம் எப்போதும் மூடியே இருக்கின்றது. அதுவும் அலங்காரமான மரவேலைப்பாடுகள் கொண்ட பிரம்மாண்டமான கதவுகள். அவர்கள் மற்றவர்களிடமிருந்து மறைப்பது தங்களின் ரகசியங்களையா? அச்சங்களையா? என்றுகூடப் பலமுறை யோசித்திருக்கின்றேன்.

எல்லா கதவுகளுக்குப் பின்னும் ஒரு சரித்திரம் இருக்கத்தான் செய்கின்றது ஒன்று முடிந்து போயிருக்கும் அல்லது எதிர்கால சரித்திரம் ஒன்று காத்துக் கொண்டிருக்கும். மனிதனுக்கு எப்படி முகமோ அப்படித் தான் வீட்டுக்கு வாசற்கதவு - உள்ளே இருப்பதைக் கட்டாயம் வெளிக்காட்டிவிடும். சிலசமயம் நாம் தான் அதனைக் கவனிக்கத் தவறிவிடுகின்றோம். வீட்டைக் கட்டிய மனிதரின் ரசனை, குணம், செருக்கு, பிழைப்பு, தொழில் என்று பலமுகம் காட்டும் கதவுகள். வீடுவீடாய் செல்லும் விற்பனைப் பிரதிநிதிகள், ஒரே மாதிரி கையெழுத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் டொனேஷன் கேட்பவர்கள், ஜோசியக்காரர்கள் போன்றவர்கள் வீட்டினுள்ளேயிருக்கும் மனிதர்களின் குணாதியங்களைக் கணிக்க உதவுவதும் கூட வாசற்கதவுகள் தான். பலமுறை யோசித்திருக்கின்றேன் எப்படி அருகிலிருக்கும் வீடுகளில் தட்டாமல் நம் வீட்டில் முதலில் வந்து அழைப்பு மணி அடிக்கின்றார்கள் என்று. முகத்தில் ‘இளிச்சவாயன்என்று எழுதி ஒட்டியிருப்பதைப் போல வீட்டுக் கதவிலும் எழுதியிருப்பது அவர்கள் கண்களுக்கு மட்டும் தெரிகின்றதோ? இப்போது அலங்காரமான கதவுகளை மட்டும் உருவாக்கி விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் கூட வந்துவிட்டிருக்கின்றன.

என் பால்ய நினைவுகளில் பதிவாகியிருக்கும் கதவுகள் எல்லாம் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை - அக்கம்பக்கத்து வீடுகள், உறவினர்களின் வீடுகள்.

திருப்பூர் கொங்குநகரில் நான் பிறந்தபோது நாங்கள் குடியிருந்த வீட்டின் வாசற்கதவு மட்டும் எனக்கு பளிச்சென்று நினைவிருக்கின்றது. உயரமான படிக்கட்டுகள், சிறிய வாசல். பச்சை வண்ணக்கதவு அதில் குறுக்கே செல்லும் வெள்ளை கம்பிகள். அந்த வயதில் என்னைக் கொஞ்சிய (?) அக்கம்பக்கத்து வீட்டாரின் முகங்கள் கூட நினைவில் இல்லை.

சேலத்தில் நான் ஆரம்ப்ப்பள்ளி படித்த போது குடியிருந்த இரு வீடுகளிலும் அதே பச்சை நிறம், வெள்ளைக் கம்பிகள் தான். அதிலும் ராமசுந்தரமுதலித் தெரு வீட்டில் மிகப்பெரிய திண்ணை. இரவில் அங்கு தான் படுப்போம் – அத்தையுடன் கதை கேட்டுக் கொண்டே (இப்போது அங்கே ஓட்டல் இருக்கின்றது). கண்ணாடி பதித்த அலமாரிக் கூண்டு அந்த வீட்டின் சிறப்பம்சம். மற்றொரு சிறப்பம்சம் அதிகமாக வரும் குழாய் தண்ணீரை கிணற்றில் விடுவார் வீட்டுத் தாத்தா. பக்கத்துவீட்டுக் கண்ணனின் வீட்டுக் கதவு கறும்பச்சையுடன் சற்றே துருப்பிடித்த கம்பிகள். அவன் வீட்டிலிருக்கும் திறக்காத அறைக்கதவு மற்றும் கூரையின் முன் இருக்கும் மழைநீர் குழாய்களில் தான் சினிமா கதாநாயகர்களின் படங்களை வெட்டி ஒட்டியிருப்பான். படம் பார்த்துவிட்டுக் கதை சொல்பவன் அவன் தான். வாராவாரம் புதிதாக படங்கள் ஒட்டுவான். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், கமல், ரஜினி எல்லாம் அந்தக் கதவின் மூலம் தான் எனக்கு அறிமுகம்.

கோவையில், நவராத்திரி சமயங்களில் நாங்கள் குடியிருந்த புதுவீதி மட்டுமில்லாது அக்கம்பக்கத்துத் தெருக்களிலுள்ள வீடுகளிலும் பொம்மக்கோல் பஜனைஎன்று கூவி அன்றைய தின பட்சணம் கொடுப்பதை வாங்கிச் சாப்பிடுவோம். அதிலும் பட்சணம் என்பது வாயில் நுழையாததால் ‘பஜனைஎன்று எளிமையாக்கிவிட்டார்கள் நண்பர்கள். எங்கள் பள்ளியிருக்கும் ராஜவீதி தேர்முட்டி வரை கூடச் செல்வதுண்டு. இப்போதிருக்கும் விற்பனைப் பிரதிநிதிகள் போல அப்போது வாசற்கதவு பார்த்தவுடன் வீட்டில் நுழையலாமா, திங்க பட்சணம் கிடைக்குமா என்று தீர்மானிப்போம். பெரும்பாலும் அந்த்த் தீர்மானங்கள் சரியாகத் தான் இருக்கும். தெரிந்தவர் வீடுகளில் எனக்கு மட்டும் சற்று அதிகமாக்க் கிடைப்பதும் உண்டு. நண்பர்கள் சிலர் இனிப்பு, காரம் என்று தனித்தனி கவர்களில் போட்டு வைத்துக் கொண்டு தன் தம்பி, தங்கைகளுக்கு எடுத்துச் செல்வதுண்டு. எங்கள் வீட்டில் நான் தான் கடைக்குட்டி என்பதால் எனக்கு அந்தப் பழக்கமேயில்லை. தம்பியோ, தங்கையோ இருந்தால் நன்றாயிருக்கும் என்று பலமுறை நான் யோசித்ததற்கான காரணம் – என் அதிகாரத்தைக் காட்ட ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்பது தானே தவிர பகிர்ந்துண்ண அல்ல. அதிலும் கதவைப் பார்த்தே அவர்கள் வீட்டில் கொலு வைத்திருக்கின்றார்களா, இல்லையா என்று மிகச்சுலபமாக தீர்மானிப்போம் – இப்போது யோசிக்கும் போது படிப்பை விடவும் அறிவை இதற்குத் தான் அதிகம் பயன்படுத்தியிருக்கின்றோம் என்று தோன்றுகின்றது. அதிலும் சில தெரிந்தவர் வீடுகளில் அந்த வீட்டு என் வயதொத்த சிறுமிகளின் முன் என் படிப்பு குறித்து ஒரு சிறிய விசாரணை இருக்கும். அப்போது நான் நன்றாகப் படிப்பவனாயிருந்ததால் அதில் எனக்குத் தயக்கம் ஏதும் இருந்ததில்லை – அவர்கள் என் கணக்கு மதிப்பெண் குறித்து எதுவும் கேட்கும் வரை.

அதிலும் எங்கள் புது வீதி வீட்டில் நான் வாசற்கதவு வழியாக வீட்டினுள் சென்றதை விடவும் சுவர் ஏறிக் குதித்தும், பக்கத்து வாத்தியார் வீட்டில் நுழைந்து சுவர் ஏறிக் குதித்தும் தான் அதிகம் சென்றிருக்கின்றேன். வாத்தியார் வீட்டுக் கதவு எப்போதும் திறந்து தான் இருக்கும் டியூஷன், கோவில் விவகாரங்கள் என்று வருவோர் போவோர் அதிகம். வாத்தியார் வீட்டு முன்கதவு சாத்தியிருந்தாலும் கட்டம் போட்ட கம்பிகள் என்பதால் கைவிட்டுத் திறந்து கொண்டு பின்பக்கம் போய் எங்கள் வீட்டுக்கு சுவர் ஏறிக் குதிப்பது என் வாடிக்கை.

வீதியின் முக்கில் முதல் வீடு என்பதால் உட்கார அகலமான கோவில் திண்ணை. கோவில் திண்ணைப் படிக்கட்டுகளில் தான் எங்கள் குரூப்பின் ஜமா எங்களைப் பற்றித் தெரிந்தவர்கள் அனைவருக்கும் அது வெட்டி மன்றம். எங்களுக்கு பட்டிமன்றம் கமல்-ரஜினி, கவாஸ்கர்-கபில், எம்.எஸ்.வி.-இளையராஜா, சில்க்-அனுராதா என்று விவாதிக்கப் பல முக்கியமான விஷயங்கள். 

இப்போது புதுவீதியின் முகமே மாறிப்போயிருக்கின்றது. அபார்ட்மெண்ட்கள், கல்யாண மண்டபம், பின்புறமிருந்த வயல்கள் பதிய லே-அவுட்களாக உருமாறியிருந்தன.  என் பால்யகாலத்தின் நினைவுகள் மட்டும் பிம்பங்களாகத் தேங்கியிருக்க, அதன் வண்ணங்களை யாரோ அபகரித்துக் கொண்டது போல் உணர்ந்தேன். வாசற்கதவுகள் மாறிப் போயிருக்கின்றது.  மூடிய அலங்காரமான கதவுகள்.  சகமனிதர்களின் மீதான தங்கள் நம்பிக்கையின்மையை அப்பட்டமாக வெளிப்படுத்தும் வாசற்கதவுகள்.  மாறிப் போயிருப்பது வாசற்கதவுகள் மட்டுமல்ல – அதன் பின்னேயிருக்கும் மனிதர்களும் தான்.

இப்போது யோசித்துப் பார்க்கும் போது ஒன்று புரிகின்றது. என் பால்ய மற்றும் பள்ளிப் பருவ ஞாபகங்களில் கதவுகள் அதிகம் இல்லை, அதிலும் அலங்காரமான கதவுகள் இல்லாததற்குக் காரணம், அப்போது நான் மூடிய வாசற்கதவுகளை பெரும்பாலும் பார்த்ததில்லை. அப்போது எளிமையான வாழ்க்கையை அச்சமின்றி, நம்பிக்கையுடன் வாழ்ந்திருக்கின்றார்கள். இப்போது, உலகமயமாக்கல் மேற்கத்திய நாடுகளின் பத்திரமில்லாத தனிமையான கலாசாரத்தை இறக்குமதி செய்து விட்டிருக்கின்றது.

சார், ஆசாரி வந்துட்டார் வாங்க...’’ என்றார் கடை ஊழியர். காலையில் பத்து மணியிலிருந்து வாசற்கதவுக்கு மரம் வாங்க கடைகடையாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றோம்...

இப்போது மணி மாலை ஐந்து!


Image Courtesy:  www.alibaba.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன...