Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out

Pages

Friday, March 23, 2012

கறுப்பு தினம் - குறும்படம் திரைக்கதை


FADE IN:

INT. MIDDLE CLASS HOUSE - MORNING                                                 SCENE #1

விடிந்து கொண்டிருக்கும் வானம். ‘கந்த சஷ்டி கவசம் கேட்கின்றது.

NARMADHA
(காய்கறி நறுக்கிக் கொண்டே)
அனு, எழுந்திரு... 
எழுந்திரு... ம்ம் சீக்கிரம்...

ANU
(புரண்டு கொண்டே)
ம்ம்ம்... மம்மி...

NARMADHA
என்னங்க, எழுந்திருங்க...

RAGAVAN
ம்ம்ம்...

பதில் சொல்லாது புரண்டு மேலும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்கின்றான்.

NARMADHA
எழுந்திருக்கறாங்களா பாரு... 
தெனம் இதே வேலை...

அனுவை எழுப்பி ‘தரதர’வென்று இழுத்து வந்து பாத்ரூமிற்குள் தள்ளுகின்றாள்.

ANU
தீபு மட்டும் தூங்கறான்... 
என்னை மாத்திரம் மொதல்ல...

NARMADHA
இப்ப வந்தேன்னா தெரியும்...

சமையலறையில் குக்கர் விசிலடிக்கின்றது. காய்கறிகளை அப்படியே போட்டுவிட்டு உள்ளே போகின்றாள்.

MILKMAN
அம்மா... பால்...

கேட்டிலிருக்கும் பையில் பால் பாக்கெட்டைப் போடுகின்றான். நர்மதா உள்கேட்டைத் திறந்து சென்று பால் பாக்கெட் எடுக்கின்றாள். குனிந்து பேப்பரும் எடுத்துக் கொண்டு வருகின்றாள்.

NARMADHA
என்னங்க, பேப்பர் வந்தாச்சு... 
எழுந்திருங்க... லேட்டாச்சு...

ANU
டாடி, ஏந்திரு டாடி... 
என் பென்சில் பாக்ஸ் எங்க?

போர்வையைப் பிடித்து இழுக்கின்றாள்.

NARMADHA
தினமும் உனக்கு இதே 
வேலையாப் போச்சு. 
டேபிள் மேல வெச்சிருக்கேன் பாரு...

ANU
எங்க மம்மி?

NARMADHA
டாடியோட போட்டோ 
இருக்கில்ல அது முன்னாடி...

ராகவன் தன் அலுவலக விழாவில் மெடல் வாங்கும் லாமினேடட் போட்டோ முன் பென்சில் பாக்ஸ்.

அனு தன் புத்தகப் பையில் புத்தகங்களைத் திணிக்கின்றாள்.

NARMADHA (CONT’D)
புக்சை ஒழுங்கா அடுக்கி வை அனு...
(ராகவனிடம்)
என்னங்க, எத்தனை தடவை 
எழுப்பறது? சீக்கிரம் எழுந்திருங்க... 
இன்னைக்கு எனக்கு ஆபீஸ்ல 
மீட்டிங் வேற இருக்கு...

காய்கறிகளை வாணலியில் போட்டுவிட்டு, டிபன் பாக்சுகளைத் திறந்து வைக்கின்றாள்.

NARMADHA (CONT’D)
(முணுமுணுக்கின்றாள்)
...ராத்திரி படுக்கும் போதே லேட்டு. 
சீக்கிரம் படுக்க வந்தாத் தானே?

தூங்கும் கணவனைக் காதலுடன் பார்க்கின்றாள்.

ANU
அம்மா, பிரதீப் பெட்லயே 
ஒன் பாத்ரூம் போயிட்டான்...

NARMADHA
நீ உன் வேலையைப் பாரு. 
அவனை இப்ப எழுப்பாதே... 
டாடியை எழுப்பு போ...

அனு படுக்கையறைக்குச் சென்று ராகவனை எழுப்புகின்றாள்.

ANU
டாடி... ஏந்திரிங்க... ஏந்திரிங்க...

                                                                                                               FADE TO BLACK.

FADE IN:

EXT. ROAD - MORNING                                                                      SCENE #2

காலை நேர உடற்பயிற்சி, நடைப் பயிற்சி செய்பவர்கள். திருப்பத்தில் செல்லும் பால் வண்டி. சில வீடுகளில் வாசலுக்கு தண்ணீர் தெளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

WALKER #1
மணி ஏழாச்சு. இன்னைக்கு 
அசோசியேஷன் மீட்டிங் இருக்கு...

WALKER #2
என்ன இருந்தாலும் ராமன் 
இப்படி செய்வாருன்னு நான் 
கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. 
மீட்டிங்ல கேக்கணும்...

WALKER #1
Nowadays, we can’t believe anyone. 
We’ve to be cautious always…

WALKER #2
அத விடுங்க. இந்த தடவை 
பொண்ணு வீட்டுக்குப் 
போனீங்களே ஏதாவது விசேஷமா?

இருவர் குரல்களும் தேய்கின்றன.

                                                                                                                        FADE OUT.

FADE IN:

INT. RAGAVAN’S HOUSE - MORNING                                                      SCENE #3

அனு பென்சில் பாக்ஸில் எது முனை உடைந்திருக்கிறது எது நன்றாக எழுதுகின்றது என்று ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றாள்.

NARMADHA
அடடே... தீபுக்குட்டி சோப்பு 
எவ்வளவு வாசனையாயிருக்குது... 
அப்பப்பா...

பிரதீப்பைக் குளிப்பாட்டித் தூக்கிக் கொண்டு வருகின்றாள்.

PRADEEP
அனூக்கு?

NARMADHA
அனுவுக்கு இந்த சோப் 
கொடுக்க வேண்டாம்... என்ன...

PRADEEP
ம்ம்ம்...

தலையசைக்கின்றான்.

NARMADHA
என்னங்க, இன்னுமா நீங்க எழுந்திருக்கல. 
ராத்திரியெல்லாம் டிவி பாத்துட்டு 
காலையில லேட்டு... தினமும் 
தான் நான் கூப்பாடு போடறேன்...
ம்ஹூம், என்னப் பிரயோஜனம்?

ANU
அம்மா...

தயங்குகின்றாள்.

NARMADHA
என்னடி? எப்பப் பாத்தாலும் 
’நொய் நொய்‘ன்னுகிட்டு...
(ராகவனிடம்)
எழுந்திருங்க... உங்களுக்குன்னு 
எவளாவது ராட்ச்சி வந்திருக்கணும் 
அப்பத் தெரிஞ்சிருக்கும் என் அருமை..

படுக்கையறைக்குச் சென்று கட்டிலில் கணவன் ராகவன் அருகில் உட்கார்ந்து போர்வையை விலக்குகின்றாள்.

NARMADHA (CONT’D)
என்னங்க, எத்தனை தடவை 
எழுப்பறது சீக்கிரம் எழுந்திருங்க..

கையைப் பிடித்து இழுப்பான் என்ற எதிர்பார்ப்புடன் காலை நேர ரொமான்சுக்குத் தயாராகின்றாள்.

RAGAVAN
இன்னைக்கு என்னமோ மாதிரியிருக்கு. 
காய்ச்சல் அடிக்குதா பாரு...
(கையைப் பிடித்து நெற்றியில் வைக்க)

NARMADHA
ஒண்ணுமில்ல... எழுந்து வாங்க...

எழ முயற்சிக்கின்றாள்.

RAGAVAN
ரொம்ப டயர்டா இருக்கு. 
கண்ணெல்லாம் எரியுது...

NARMADHA
ஏற்கெனவே லீவு ஜாஸ்தி. 
இனி லீவு போட்டீங்க...
(beat)
...எல்லாம் மாத்திரை போட்டா 
சரியாயிடும்...

RAGAVAN
கண்ணு செவந்திருக்கா பாரு...

NARMADHA
நேத்து ரொம்ப நேரம் டிவி 
பாத்துக்கிட்டிருந்தீங்கல்ல 
அதான்... வேற ஒண்ணுமில்ல...
(சற்று கலக்கமடைந்தாலும் 
வெளிக்காட்டிக் கொள்ளாமல்)
அனுக்குட்டி கூட ரெடியாகியாச்சு... 
ஃப்ரெஷ்ஷா மூஞ்சி கழுவிட்டு 
வாங்க. சூடா ஒரு கப் காபி 
சாப்பிட்டா எல்லாம் சரியாயிரும். 
என்னடா அனுக்குட்டி?

ANU
ஆமா டாடி... இன்னைக்கு 
உங்க பைக்ல கொண்டு 
விடுங்க... ப்ளீஸ் டாடி...

                                                                                                                         FADE OUT.

FADE IN:

INT. RAGAVAN’S HOUSE - MORNING                                                       SCENE #4

அனுவும், பிரதீப்பும் ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து கொண்டிருக்க, நர்மதா அனுவுக்கு ஷு மாட்டி விட்டுக் கொண்டிருக்கின்றாள்.

NARMADHA
ஆடாம நில்லு...கொஞ்ச நேரம்...

ANU
அம்மா மணி 8 ஆச்சு வேன் வந்துடும்...

PRADEEP
பைக்ல போலாம்... பைக்ல போலாம்...

NARMADHA
அதெல்லாம் நாளைக்குப் போலாம்...
(உள்ளே திரும்பிப் பார்த்து)
எங்கே டாடி காபி சாப்பிட்டுப் 
போய் மறுபடி படுத்துட்டாரா?

நர்மதா உள்ளே போகின்றாள். ஸ்கூல் வேன் புழுதி பறக்க வந்து நிற்கிறது.

ANU
மம்மி, வேன் வந்தாச்சு...

பைகளை எடுத்துக் கொண்டு அனு ஓட, பிரதீப்பையும் அழைத்துக் கொண்டு நர்மதா அவசரமாக வந்து வேனில் ஏற்றுகின்றாள்.

PRADEEP
மம்மி, டாட்டா...

கையசைக்கின்றான்

NARMADHA
பை... பை...
(வந்து கொண்டே)
...என்னாச்சு இவருக்கு இன்னைக்கு?

முணுமுணுத்துக் கொண்டே வீட்டிற்கு உள்ளே வருகின்றாள். கேட்டை மூடுகின்றாள்.

                                                                                                                      DISSOLVE TO:

INT. RAGAVAN’S HOUSE - MOMENTS LATER                                     SCENE #5

சாப்பிட்ட தட்டை ‘கிச்சன் சிங்க்’கில் சப்தம் எழுப்ப போட்டுவிட்டு கை கழுவுகின்றாள் நர்மதா. கண்களில் கண்ணீர். மூக்கை உறிஞ்சுகின்றாள்.

NARMADHA
எல்லாம் என் தலையெழுத்து... 
இப்படி அவஸ்தைப்படணும்னு...

முணுமுணுக்கின்றாள்.

RAGAVAN
என்ன சத்தம்?

NARMADHA
(முணுமுணுப்பு)
முதல்லேயே சொல்லியிருந்தா 
இன்னும் சீக்கிரமே எழுந்திருப்பேன். 
இப்ப ரெண்டு பஸ் மாத்திப் 
போகணும்... சே..

RAGAVAN
ம்...ம்ம்ம்... இப்ப என்ன ஆச்சு?

NARMADHA
நான் கிளம்பறேன். டேபிள் மேலே 
மாத்திரை இருக்கு மத்தியானத்துக்கு. 
மறக்காம எடுத்துக்கங்க.

RAGAVAN
என் செல்போன் வேணா 
எடுத்துட்டுப் போறியா?

NARMADHA
நீங்களே வெச்சுக்குங்க. 
எனக்குப் புதுசு தான் வேணும். 
இது ஒண்ணும் வேணாம்.

RAGAVAN
நில்லு. நான் வேணா 
பஸ் ஸ்டாப் வரைக்கும் வரேன்.

NARMADHA
ஒண்ணும் வேணாம். எனக்குன்னு 
வரும் போது தான் 
எப்பவும் சாக்கு சொல்வீங்க...

RAGAVAN
புரிஞ்சுக்காம பேசினதையே பேசிட்டு... 
புரிஞ்சுக்கவே மாட்டேன்னு 
அடம் புடிக்கறியா?

NARMADHA
நான் அடங்காதவளாவே 
இருந்துட்டுப் போறேன். 
நீங்க என் மேல இருக்கற கோவத்துல 
டாக்டர்கிட்ட போகாம இருக்காதீங்க. 
கதவை சாத்திக்குங்க.

ராகவன் கேட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளே வருகின்றான். ஓடிக் கொண்டிருக்கும் டி.வி.யை அணைக்கின்றான். பின்வாசல் கதவு சாத்தப்பட்டிருக்கிறதா என்று பார்த்துவிட்டு படுக்கையில் சென்று ‘தொப்’பென்று வீழ்கின்றான்.

RAGAVAN
ச்சே... என்ன பொழப்புடா இது...

                                                                                                                       FADE OUT.

FADE IN:

EXT. SOME BUSY ROAD - MORNING                                                       SCENE #6

சாலையோர கடிகாரக் கடையின் விளம்பர கடிகாரம் 9.30 மணி காட்டுகின்றது. பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி செல்லும் இளைஞர்கள், அலுவலகம் செல்வோர் அனைவரும் தத்தமது அவசரத்தில் இருக்கின்றார்கள். டவுன் பஸ் ஒரு பக்கம் சாய்ந்து செல்கின்றது. இரு வயதானவர்கள் பேசிக் கொண்டே சாலை நடுவே வருகின்றார்கள்.

BUS DRIVER
என்னா பெரிசு வேற வண்டி 
கிடைக்கலையா? ஓரமாப் போ...

ஹாரன் அடிக்க, அந்தப் பெரியவர் திடுக்கிட்டுப் பார்த்து சுதாரிக்கின்றார்.

மாடு ஒன்று அசை போட்டுக் கொண்டு சாலையைக் கடக்க முயல்கிறது.

                                                                                                                             FADE OUT.

FADE IN:

INT. NARMADA’S OFFICE - DAY                                                                    SCENE #7

நர்மதாவும், இன்னொருத்தியும் ‘எலக்ட்ரானிக் மெஷினில்’ கார்டைப் பதித்துவிட்டு அலுவலகத்தின் உள்ளே வருகின்றார்கள். மணி 9.30.

NARMADHA
ஹாய் குட்மார்னிங்

FRIEND #1
ஹாய், மீட்டிங்ன்னு மேனேஜர் 
சீக்கிரமே வந்துட்டாரு... போ...போ...

NARMADHA
மேனேஜர் வந்தாச்சா..?

பரபரப்புடன் ஓடுகின்றாள். தன் மேசையிலிருந்து பைல்களை எடுத்துக் கொண்டு தன் மேசையிலிருக்கும் சாமி படங்களைக் கும்பிட்டு விட்டு மேனேஜர் ரூமிற்குள் போகின்றாள்.

FRIEND #2
காலையிலேயே வந்தவுடனே 
ஆரம்பிச்சாச்சா? ரிலாக்ஸ்...

NARMADHA
உனக்கென்ன தெரியும். 
சாதாரண நாள்லேயே பறப்பாரு. 
இன்னைக்கு மீட்டிங் வேறே கேட்கணுமா?

FRIEND #2
என்ஜாய்...

                                                                                                                    FADE OUT.

FADE IN:

INT. ANU’S SCHOOL - DAY                                                                    SCENE #8

ஆசிரியை கரும்பலகையில் எழுதிக் கொண்டிருக்கின்றார்.

TEACHER
H2O இஸ் டூ ஹைட்ரஜன் 
அண்ட் ஒன் ஆக்சிஜன்.

பியூன் வருகின்றான். ஆசிரியை அவனிடமிருந்து கடிதத்தை வாங்கிப் படிக்கின்றார்.

ANU
ஏய் இந்தப் பேனா 
புதுசா? எங்கே வாங்கினே?

TEACHER
சைலன்ஸ்...

அனு பின்னால் திரும்பிப் பார்க்கின்றாள். பின் வரிசை மாணவி ஏதோ கிறுக்கிக் கொண்டிருக்கின்றாள்.

                                                                                                                  FADE OUT.

FADE IN:

INT. RAGAVAN’S HOUSE - AFTERNOON                                           SCENE #9

அமைதியான வீடு. பக்கத்து வீட்டிலிருந்து சத்தம் கேட்டது.

TELEVISION (V.O.)
பாத்துக்க உன் கண்ணு முன்னாடியே 
அவளை ஓட ஓட 
விரட்டறேனா இல்லையா பாரு?

ராகவன் படுக்கையிலிருந்து எழுந்து ஃப்ளாஸ்க்கிலிருந்து வெந்நீர் எடுத்துக் குடிக்கின்றான். செல்போன் மணியடிக்கின்றது.

RAGAVAN
ஹலோ?

AGENT
(செல்போனில்)
சார், இந்த மாசத்திலிருந்து 
நாங்க புது ஸ்கீம் 
அறிமுகப்படுத்தியிருக்கோம். 
சார், நீங்க ஒரு தடவை...

RAGAVAN
சே... கொஞ்ச நேரம் 
நிம்மதியா இருக்க விட மாட்டாங்க...

ராகவன் செல்போனை ‘சுவிட்ச் ஆஃப்’ செய்து வைக்கின்றான். வீட்டு ஹாலில் இரைந்து கிடக்கும் துணிமணிகளையும், பேப்பர்களையும் சற்று பார்த்துவிட்டு ஏதோ நினைத்துக் கொண்டவனாய் மறுபடியும் சென்று படுத்துக் கொள்கின்றான்.

TELEVISION (V.O.)
அவளை அவ புருஷன்கிட்டேயிருந்து
பிரிக்கறதுக்குத் தானே 
நான் வந்திருக்கேன்... பாத்துக்கிட்டே இரு...

                                                                                                                      FADE OUT.

FADE IN:

EXT. ROADSIDE TEA SHOP - AFTERNOON                                          SCENE #10

சிலர் பேப்பர் படித்துக் கொண்டும், டீ குடித்துக் கொண்டும் இருக்கின்றார்கள்.

PERSON #1
என்ன அநியாயங்க நாமெல்லாம் 
ஒரு ரூவா கம்மியா கொடுத்தா 
வாங்க மாட்டானுங்க. ஆனா 
இங்க பாருங்க நிறைய பேரு 
கோடிக்கணக்குலே வரி பாக்கி 
வெச்சிருக்காங்களாம்...

PERSON #2
வாங்குன கடனையே 
கொடுக்கறதில்ல வரியை 
எங்க கொடுக்கப் போறாங்க.

PERSON #3
...தினமும் புதுசு புதுசா 
ஏமாத்திகிட்டு தான் 
இருக்காங்க ஆனாலும் 
நம்ம சனங்க மறுபடியும் 
ஏமாத்தறவங்கிட்டயே 
தானே போறாங்க...

இவர்களைத் திரும்பிப் பார்த்த டீக்கடைக்காரர் ரேடியோவை ஆன் செய்கின்றார்.

RADIO (V.O.)
இப்போது மணி நான்கு மணி முப்பது நிமிடங்கள். 
முக்கியச் செய்திகள். தனி மாநிலம் கேட்டு 
உண்ணாவிரதம் இருந்த ‘‘புதிய நாடு’’கட்சித் 
தலைவர் இன்று காலை மருத்துவமனையில் 
அனுமதி. உடல்நிலை கவலைக்கிடம். அதனைக் 
கண்டித்து கல்லூரி மாணவர் தீக்குளிப்பு. கடந்த 
பத்து நாட்களாக அவர் தன் கோரிக்கைகளுக்காக 
உண்ணாவிரதம் இருந்தார். அவரைக் கைது செய்து 
மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை 
அளிக்கப்பட்டு வருகிறது...

அனைவரும் அதிர்ச்சியடைந்து அமர்ந்திருக்கின்றார்கள்.

                                                                                                                           DISSOLVE TO:

ONE ROWDY
ஏண்டா டேய் எவன்டா அவன் 
கடையைத் திறந்து 
வெச்சிருக்கறது... மூடுறா...

கற்கள் ‘சடசட’வென விழுகின்றன. டீக்கடைக்காரர் அவசரஅவசரமாக ஷட்டரைப் போடுகின்றார்.

                                                                                                                          FADE TO:

FADE IN:

EXT. ROADSIDE TEA SHOP - MOMENTS LATER                                      SCENE #11

கற்கள், கண்ணாடித் துகள்கள், சேர், ரப்பர் செருப்பு என்று பலதும் இறைந்து கிடக்கின்றது. சாலையின் நடுவில் டயர்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. தூரத்தில் ஆட்கள் போய்க் கொண்டிருக்கின்றார்கள். டீக்கடைக்காரர் ஷட்டரைக் கொஞ்சம் திறந்து எட்டிப் பார்க்கின்றார்.

                                                                                                                           FADE OUT.

FADE IN:

INT. NARMADA’S OFFICE - EVENING                                                         SCENE #12

‘தயவு செய்து வேலை நேரத்தில் செல்போன் உபயோகிக்காதீர்’ - போர்டு. எல்லா அலுவலக இருக்கைகளும் காலியாக இருக்கின்றன. ஹாலில் மீட்டிங் நடந்து கொண்டிருக்கின்றது. ஒருவர் ஆயாசமாகக் கடிகாரத்தைப் பார்க்கின்றார். அனைவரும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். நர்மதா முதலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.

M.D. (O.S.)
ஐ வான்டட் டு நோ ஹூ ஈஸ் 
ரெஸ்பான்சிபிள் ஃபார் திஸ்? 
திவாகர் எனி எக்ஸ்பிளனேஷன்?

MANAGER
சார் த திங்க் இஸ்...

செல்போன் சப்தமெழுப்புகின்றது. அவர் அதை அவசரமாக எடுத்து அணைக்க முயற்சிக்கின்றார்.

M.D.
டோன்ட் யு ஹாவ் சென்ஸ்?

முறைக்கின்றார். ஹாலில் உள்ள கடிகாரத்தில் மணி ஐந்தரை.

                                                                                                                              FADE OUT.

FADE IN:

INT. RAGAVAN’S HOUSE - EVENING                                                             SCENE #13

ஹாலிலுள்ள கடிகாரத்தில் மணி ஆறரை. வாசற்கதவை யாரோ தட்டும் சப்தம். ராகவன் படுக்கையை விட்டு எழுகின்றான்.

ANU
டாடி டாடி... கதவைத் திறங்க டாடி..

பெல் அடிக்கின்றாள், கதவைப் பிடித்து உலுக்குகின்றாள். பின்னால் பிரதீப்.

ANU (CONT’D)
சீக்கிரம் வாங்க டாடி...

RAGAVAN
என்னடா இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க?

ANU
ஐயோ டாடி இன்னைக்கு வழியெல்லாம் 
ரகளை. பஸ் கண்ணாடியெல்லாம் 
உடைச்சிட்டாங்க... ஸ்கூலும் 
முன்னாடியே விட்டுட்டாங்க..

RAGAVAN
ஏன் என்னாச்சு?

ANU
டாடி, உனக்கு விசயமே தெரியாதா? 
யாரோ செத்துப் போயிட்டாங்களாம்... 
அதான் லீவு...

பிரதீப் புத்தகப் பைகளை வீசி எறிந்து விட்டு உள்ளே ஓடிப்போய் டி.வி. போடுகின்றான். கார்டூனுக்கு சேனல் சேனலாக மாற்றுகின்றான்.

RAGAVAN
இரு... இரு...

ராகவன் ரிமோட்டை வாங்கி செய்திகளில் நிறுத்துகின்றான்.

TELEVISION (V.O.)
...தீக்குளித்த கல்லூரி மாணவர் 
மருத்துவமனையில் காலமானார். 
அவருக்கு வயது 18...

ராகவனின் ரியாக்‌ஷன்.

                                                                                                                                 FADE TO:

FADE IN:

INT. RAGAVAN’S HOUSE - MOMENTS LATER                                               SCENE #14

ராகவன் மேசை, அலமாரிகளில் எதையோ தேடிக் கொண்டிருக்கின்றான். கையில் செல்போன்.

ANU
டாடி... என்ன தேடறீங்க?

RAGAVAN
அம்மா கூட வேலை 
பார்க்கறவர் செல் நம்பர்டா...

ANU
டாடி, அம்மா ஆபீஸ் போன் 
நம்பர் கொடுத்திருக்காங்க...

தன் புத்தகப்பையை எடுக்க ஓடுகின்றாள்.

RAGAVAN
அது என்கேஜ்டா இருக்கு 
அதான். சரி நீ போ.. பால் சாப்பிடு.

ஏதோ ஒரு எண்ணுக்கு முயற்சிக்கின்றான்.

ELECTRONIC VOICE
ப்ளீஸ் செக் த நம்பர்...

RAGAVAN
சே... இன்னைக்குன்னு 
பார்த்து ஒண்ணும் போகாது. சே...

வேறு ஒரு எண்ணிற்கு டயல் செய்கின்றான். தலையைப் பிடித்துக் கொள்கின்றான்.

ELECTRONIC VOICE
...ஆல் லைன்ஸ் இன் திஸ் ரூட் ஆர் பிசி...

                                                                                                                              FADE OUT.

FADE IN:

INT. RAGAVAN’S HOUSE - NIGHT                                                                   SCENE #15

செய்திகளில் உலக உருண்டை உருள்கின்றது.

ANU
டாடி, தீபு என்னை 
எழுதவிடாம புக்கைப் பிடுங்கறான்...

RAGAVAN
ஏய் சண்டை போடக்கூடாது. 
நீ இங்க வந்து எழுது. பால்காரன் 
வேற வரலை. ஆபீசுல ரிங்க் 
போய்கிட்டேயிருக்கு... 
அம்மாவை இன்னும் காணோம்

PRADEEP
ப்பா.. அனு அடிக்கறாப்பா..

RAGAVAN
அனு உன்னை இங்க வான்னு 
சொன்னேன்ல.. தீபு இங்க வா 
நான் உனக்கு படம் வரைய 
வேற நோட்டு தர்றேன். வா, 
நாம பக்கத்து வீட்டுக்குப் 
போய் பால் வாங்கிட்டு வரலாம்.

PRADEEP
அனுக்கா, டாட்டா பை பை

RAGAVAN
அனு, கதவைச் சாத்திக்கோ. 
உடனே வந்திடறேன்...

                                                                                                                                FADE OUT.

FADE IN:

INT. NEIGHBOUR’S HOUSE - NIGHT                                                                SCENE #16

பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டுகின்றான். பின்பு காலிங் பெல் அடிக்கின்றான்.

NEIGHBOURHOOD LADY
இதோ வரேன்.. வரேன். 
வாப்பா.. நர்மதா வந்துட்டாளா?

RAGAVAN
இல்லேங்க. பால்காரன் வந்தானா?

NEIGHBOURHOOD LADY
எங்கேருந்து வர்றது? ஊரெல்லாம் 
ரகளையாயிருக்கே. அதான் நர்மதா 
வந்தாச்சான்னு கேட்டேன். இரு.. 
சாயந்திரம் எல்லாரும் வர்றாங்கன்னு 
காலையிலேயே அதிகமா வாங்கினேன். 
யாரும் வரலைன்னு போன் தான் வந்துச்சு...

பேசிக் கொண்டே செல்கின்றார்.

NEIGHBOURHOOD BOY
....பஸ்லேருந்து உடனே இறங்குங்க 
இல்லேன்னா ஆளோடவே 
கொளுத்திடுவோம்னு மிரட்டறாங்க...

YOUNGER BOY
போலீஸ் யாரும் இல்லயா?

NEIGHBOURHOOD BOY
இருந்தாரு. ஆனா ஒருத்தரு 
என்ன செய்ய முடியும்? 
ரௌடிங்க பெரிய கும்பலா வந்தாங்க.

YOUNGER BOY
நிஜமாவே பஸ்சைக் 
கொளுத்திட்டாங்களா?

NEIGHBOURHOOD BOY
அது மட்டுமா கண்ணாடியெல்லாம் 
உடைச்சு.. ரோட்ல இருக்கற 
கடையிலிருந்து டி.வி., ப்ரிட்ஜ் 
எல்லாம் வெளியே எடுத்துப் 
போட்டு உடைச்சிட்டாங்க.

ராகவனின் முகத்தில் கலக்கம்.

NEIGHBOURHOOD LADY
இந்தாப்பா ராகவா, வண்டி எதுவும் 
ஓடலயாம். நீ வேணும்னா ஒரு 
நடை பார்த்துட்டு வரலாம் தானே. 
பாவம் நர்மதா எங்க மாட்டிகிட்டு 
இருக்காளோ என்னவோ. எங்க 
கவிதாவை இப்பத் தான் இவர் 
அழைச்சுட்டு வந்தார். அதான் சொன்னேன்.

RAGAVAN
அது சொல்லத்தாங்க வந்தேன். 
நீங்க கொஞ்சம் குழந்தைங்களைப் 
பாத்துகிட்டீங்கன்னா உதவியாயிருக்கும்.

NEIGHBOURHOOD LADY
அதுக்கென்ன தாராளமா பார்த்துக்கறேன்.

RAGAVAN
நர்மதா கூட வேலை பார்க்கிறவர் 
வீடு பக்கத்துல தான் இருக்கு. 
அவர்கிட்ட விசாரிச்சுட்டு 
அப்படியே போயி அவளையும் 
கூட்டிட்டு வந்திடறேன். 
ரொம்ப நன்றிம்மா.

NEIGHBOURHOOD LADY
இதுக்கு எதுக்குப்பா நன்றியெல்லாம். 
ஒரு அவசர சமயத்துக்கு ஒத்தாசை 
செய்யலேன்னா பக்கத்துலே 
இருந்து என்ன பிரயோசனம்?
(உள்ளே திரும்பி)
கவிதா நீ சாப்பிட்டுட்டு மூடி 
வை. நான் பக்கத்து வீட்டுலே இருக்கேன்...
(ராகவனிடம்)
...வாப்பா போகலாம்.

                                                                                                                               FADE OUT.

FADE IN:

EXT. ON ROAD - NIGHT                                                                                     SCENE #17

பெட்டிக்கடை ஒன்று மட்டும் திறந்திருக்கிறது. ஒரே ஒரு லைட் மட்டும் எரிகின்றது. அதன் முன்னால் சிலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். சாலையின் நடுவில் ஒரு பேருந்து கண்ணாடிகளெல்லாம் நொறுக்கப்பட்டு எலும்புக்கூடாய் நின்று கொண்டிருக்கின்றது. சாலையின் நடுவில் டயர்கள் எரிந்து கொண்டிருக்கின்றன.

PERSON #1
ஹலோ அந்தப் பக்கம் போகாதீங்க...

RAGAVAN
ஏன்? இதான் குறுக்கு வழி அதான்...

வண்டியை நிறுத்துகின்றான்.

PERSON #2
ரௌடிங்க ஒரு ஆளை அடிச்சுப் 
போட்ருக்காங்க. இன்னும் இந்த
ஏரியாவுலேயே தான் சுத்திட்டு இருக்காங்க...

PERSON #1
எதுக்கும் பாத்து ஜாக்கிரதையாப் போங்க...

ராகவனின் வண்டி கிளம்புகின்றது.


EXT. ON ROAD - NIGHT                                                                                   SCENE #18

சாலை நெடுகிலும் சில கடைகள் மொத்தமாக சூறையாடப்பட்டு தீக்கிரையாகியிருக்கின்றன. எல்லா கடைகளும் மூடியிருக்கின்றன.

ராகவனின் வண்டி ஒரு திருப்பத்தில் திரும்புகின்றது.

கொஞ்ச தூரம் போன பின் வண்டி மக்கர் செய்கின்றது.

தூரத்தில் ஒரு கும்பல் ஆக்ரோஷமாக, கையில் ஆயுதங்களுடன் ஓடி வருகின்றது.

ராகவன் பதட்டத்துடன் வண்டியைக் கிளப்ப முயற்சிக்கின்றான்.

                                                                                                                              FADE OUT.

FADE IN:

INT. NARMADHA’S OFFICE - NIGHT                                                             SCENE #19

நர்மதா தொலைபேசியில் எண்களை சுழற்றிக் கொண்டிருக்கின்றாள்.

FRIEND
ஏய் சீக்கிரம் வா... 
எத்தனை நேரம் பண்றே...

NARMADHA
கொஞ்சம் இரு. வீட்டுக்கு 
அப்போதிலிருந்து டிரை 
பண்றேன் கிடைக்க மாட்டேங்குது...

FRIEND
எங்க வீட்டுக்கும் கிடைக்கலடி. 
ஏதோ பிரச்னையாம். 
வா சீக்கிரம் போலாம்.

ஆபீஸ் முழுவதும் காலியாக இருக்கின்றது.

SECURITY GUARD
ஏம்மா, நீங்க ரெண்டு பேரும் 
இன்னும் போகலியா? எத்தனை 
நேரம்மா வண்டி காத்துகிட்டிருக்கும்.

இருவரும் ஓடுகின்றார்கள்.

                                                                                                                               FADE OUT.

FADE IN:

INT. RAGAVAN’S HOUSE - NIGHT                                                                  SCENE #20

அனுவும், பிரதீப்பும் அப்படியே புத்தகங்களின் மேல் தூங்கிப் போயிருக்கின்றார்கள். தொலைக்காட்சியில் அதே செய்திகள்.

காலிங் பெல் அடிக்கின்றது.

NEIGHBOURHOOD LADY
வர்றேன் வந்துகிட்டே இருக்கேன்..

கதவைத் திறக்கின்றாள். நர்மதா உள்ளே வருகின்றாள். அனு சத்தம் கேட்டு எழுகின்றாள்.

ANU
அம்மா.. ஏம்மா இவ்ளோ லேட்டு?

NARMADHA
உங்க ரெண்டு பேரையும் 
யாரு கூட்டிகிட்டு வந்தாங்க?

NEIGHBOURHOOD LADY
ஆமா எங்கே உன் வீட்டுக்காரர்?

NARMADHA
ஏன் அவரு எங்கே போனாரு?

NEIGHBOURHOOD LADY
உன்னைத் தேடித் தான்...

NARMADHA
இவரு ஏன் என்னைத் தேடிப் 
போகணும். லேட்டாயிட்டதால 
எல்லாரையும் ஆபீஸ் வண்டியிலேயே 
கொண்டு விட்டாங்க... 
காலையிலிருந்தே காய்ச்சல் வேற..

குழந்தைகளுடன் படிக்கட்டிலேயே உட்கார்ந்து கொள்கின்றாள்.

NEIGHBOURHOOD LADY
சரி நர்மதா, நான் வர்றேன். 
இந்த ராத்திரி பனியில வெளிய 
உட்கார்ந்துட்டு அதுவும் 
குழந்தைங்களோட. 
உள்ளே போ முதல்ல.

NARMADHA
இல்ல அவரு வந்துரட்டும்...

NEIGHBOURHOOD LADY
அவனுக்கு என்ன இதோ வந்திடுவான்.
நீ உள்ளே போ...

ஏதோ வண்டி வரும் சத்தம் கேட்கின்றது.

NEIGHBOURHOOD LADY (CONT’D)
பாரு... அவன் வண்டி மாதிரி தான் இருக்கு...


                                                                           THE END

எழுத்து, ஆக்கம்:    ஸ்ரீதர் S.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன...